தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு பக்கம் இலங்கை கடற்படையினர், மற்றொருபுறம் இலங்கை கடற்கொள்ளையரின் தாக்குதலால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நம்முடைய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்த படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டு வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னையை மெத்தனமாக கையாள்வது சரியானது தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு வருவது இந்தியாவிற்கே அவமானமில்லையா என வினவிய அவர், இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடிதம் எழுதுவதோடு நிறுத்திவிடாமல், மத்திய அரசை வலியுறுத்தி அதனைச் செய்திட வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என்றும் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.








