நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடிகரான நிக் ஜோன்ஸ் என்பவரை 2018 ம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தம்பதியினர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் ரசிகர்கள் குழந்தை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தனர். 100 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிக்சை பிரிவில் இருந்த குழந்தை அன்னையர் தினத்தில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.
இதையடுத்து இன்று (மே 9) பிரியங்கா-நிக் தம்பதியினர் தங்கள் குழந்தை மால்தியின் முதல் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர். அந்த புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியும், நிக் ஜோன்ஸ் அவரது சிறிய கையைப் பிடித்தப்படியும் உள்ளனர். இருப்பினும், தங்கள் மகளின் முகத்தை இதய எமோஜி மூலம் மறைத்துள்ளனர்.
இதுகுறித்து பிரியங்கா-நிக் ஜோன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அன்னையர் தினத்தில், கடந்த சில மாதங்களாக நாங்கள் பயணித்த கடினமாக காலத்தை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. 100 நாட்களுக்குப் பிறகு. NICU வில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டில் இருக்கிறார். குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், எவ்வளவு விலைமதிப்பற்றது மற்றும் சரியானது என்பது தெளிவாகிறது” என கூறியுள்ளனர்.
Advertisement: