முதலில் தண்டவாளம்; இப்போ TRAIN-ஆ!!

பெர்முடா முக்கோணம் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே, அங்கு செல்லும்  கப்பல்கள் அனைத்தும் மாயமாகின்றன எனும் செய்திகள் அவ்வப்பொழுது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஒரு பெரிய சம்பவம் இங்கே அரங்கேறியுள்ளது.  கிணத்தை…

பெர்முடா முக்கோணம் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே, அங்கு செல்லும்  கப்பல்கள் அனைத்தும் மாயமாகின்றன எனும் செய்திகள் அவ்வப்பொழுது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஒரு பெரிய சம்பவம் இங்கே அரங்கேறியுள்ளது. 

கிணத்தை காணும் எனும் வடிவேலுவின் காமெடியை போல் இங்கு சரக்கு பெட்டிகளுடன் ஒரு ரயிலே காணாமல் போயுள்ளது, அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே எனும் உங்கள் மைண்டு வாய்ஸ் தான் எங்களுக்கும். அந்த சம்பவம் என்னவென்று இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

பிப்ரவரி 1-ம் தேதி ரயில் எண் PJT1040201 என்ற சரக்கு ரயில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் மிகான் சரக்கு முனையத்தில் இருந்து மும்பை புறப்பட்டது. 90 கன்டெய்னர்களை கொண்ட அந்த ரயில், 5 நாட்களில் மும்பையை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நேரதிற்கு போய் சேர வேண்டிய சரக்கு ரயிலை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

அந்த ரயில் கடைசியாக, மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மற்றும் கல்யாண் ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள ஒம்பர்மலி ரயில் நிலையத்தைக் கடந்துள்ளது பதிவாகியுள்ளது. பாதி வழியில் மாயமான அந்த ரயிலின் தற்போதைய இடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

அந்த ரயிலை கண்டறிய பல்வேறு அதிகாரிகள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டும், ரயிலின் இருப்பிடம் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தொலைந்த அந்த ரயிலைக் கண்டறியும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இது குறித்து பல செய்திகள் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம், கன்டெய்னர் கார்ப்பரேஷன், அந்த ரயிலை ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு சென்று விட்டதாக கூறியுள்ளது.

– ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.