இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிகளர் செய்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா அபாரமாக ஆடி 175 ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் மேலும் ரவி அஷ்வின் மற்றும் ஹனுமா விஹாரி உள்ளிட்டோர் அரைசதம் அடித்து இந்தியா 574 ரன்களை குவிக்க வித்திட்டனர்.

அதன் பின் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சுழலில் 174 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் பாலே ஆன் முறையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி மீண்டும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவி அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







