மதுரை – நத்தம் மேம்பாலத்தில் கேஸ் வெல்டிங் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
மதுரை புதுநத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு (பறக்கும் பாலம்) மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. 2022-ம் ஆண்டிறுதிக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு இரவு-பகல் என வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் புதுநத்தம் ரோடு திருப்பாலை பகுதியில் பால வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலத்தின் மேலே வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் தப்பினர்.
இந்த விபத்து குறித்து உடனடியாக மதுரை தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ பரவாமல் உடனடியாக விரைந்து செயல்பட்டு அணைத்தனர். இந்த விபத்தினால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணியின் போது மூன்றாவது முறையாக விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் பணியின் போது கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் காயம் அடைந்தனர். அதே போன்று 2021 ஆகஸ்ட் 28ம் தேதி திருப்பாலை பகுதியில் சர்வீஸ் பாலத்தில் இணைப்பு காரிடர் இடிந்து விபத்திற்கு உள்ளானதில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.