நடிகர் விஜய் ரசிகர்களுக்குள் வெடித்த மோதல் கொடூர கொலைகளில் முடிந்த சம்பவம் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் 26 வயதான விக்னேஷ். கார் ஓட்டுநரான இவர், பீர்க்கன்காரணை ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்த மணிமாறன், மணிகண்டன், சூர்யா ஆகியோருடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார். இவர்கள் அனைவருமே நடிகர் விஜய்யின் ரசிகர்கள்.
விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் பெருங்களத்தூர் பகுதியில் விக்னேசும் அவரது நண்பர்களும் பெரிய பெரிய கட்-அவுட்களும், பேனர்களும் வைப்பதும் வழக்கம். ஒரு முறை பேனரில் விக்னேஷின் நண்பரின் பெயர் இடம் பெறாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2019 அக்டோபர் மாதம், பெருங்களத்தூர் சிவன் கோவில் தெரு அருகில் விக்னேஷின் நண்பர்களான சரத்குமாரும், சந்துருவும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மணிமாறன், மணிகண்டன் மற்றும் சூர்யா ஆகியோர் சேர்ந்து விக்னேஷின் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, மணிகண்டனை சரத்குமார் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார் மற்றும் சந்துரு ஆகியோரை கைது செய்தனர்.
அதன்பின்பு 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள டீக்கடையில் சூர்யா டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ், அவரது நண்பர்களான திருப்பதி மற்றும் தாமு ஆகியோர் சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்டனர். அதில் தாமு சூர்யாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து திருப்பதி கைது செய்யப்பட்டார். தாமு மற்றும் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று வெளியில் வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது விக்னேஷ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழைய பெருங்களத்தூர் சுண்ணாம்பு கால்வாய் அருகே நேற்று இரவு 10 மணியளவில் விக்னேஷ் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மணிமாறன், மணிகண்டன், சூர்யா உட்பட 10 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்து இரத்தவெள்ளத்தில் வீட்டுக்கு சென்ற விக்னேஷை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விக்னேஷின் அண்ணன் ஜெகதீசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விக்னேஷை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சூர்யா, அஜித், கார்த்திக், சக்கரவர்த்தி ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டன், மணிமாறன் உட்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நடிகர் விஜய் திரைப்படத்திற்காக கட் அவுட், பேனர் வைப்பதில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை, தேவையற்ற விரோதத்தால் அடுத்தடுத்து கொலைகளுக்கு வழிவகுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







