தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றமா..? – இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் புதிய தலைவர் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ஆக.4ல்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் ஏற்பட உள்ளதாகவும் புதிய தலைவர் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் ஆக.4ல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த தேர்தலில் காங்கிரஸின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆலோசனையை தொடங்குகிறது. இந்த ஆலோசனையில் ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்த  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கெடுக்க உள்ளனர்.

அந்த வகையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரின் பதவி காலம் 3 ஆண்டுகாலம் என்றாலும், 4 ஆண்டுகளை கடந்தும் கே எஸ் அழகிரி பதவியில் உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், கே.எஸ். அழகிரி தலைவராக நீடித்து வருகிறார்.

புதுச்சேரி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்ட போதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் குறித்த கேள்வி எழுந்தது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரலாற்றில் கடந்த 20 வருடத்தில் 4 வருடங்களை கடந்த நிலையில் தலைவராக கே.எஸ்.அழகிரி செயல்படுகிறார். ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு பிறகு தலைவர் மாற்றம், நாடாளுமன்ற தேர்தல் குழுக்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்க்கான தேர்வில் செல்லக்குமார், ஜோதிமணி ஆகியோர் முன்னணியில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழுவில் கே எஸ் அழகிரிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் சசிகாந்த், மாணிக்கம் தாகூர், விஜயதாரணி, உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது

திருநாவுக்கரசர் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தலைவர் பொறுப்பிலிருந்து கே.எஸ். அழகிரியை விடுவிக்கும் முடிவை எடுத்தால், முக்கியத்துவம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவகல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.