பாலக்காடு அருகே காட்டுப் பன்றிக்காக விவசாயத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் செல்வது வழக்கம். இந்நிலையில், பாலக்காடு மாவட்டம், முத்தூர் அருகே உள்ள அச்சம்பள்ளி என்ற பகுதியில் விவசாயத் தோட்டம் அருகே வந்த பெண் யானை ஒன்று அங்கு காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத் துறையினர் உயிரிழந்த யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு காவலர்கள் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








