உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு தினத்தில் வலியுறுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுகாதாரமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற தண்ணீரின் விளைவுகள் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2018-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை நிறுவியது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உணவு மூலம் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும்,மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தவதற்காகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகியவை, உறுப்பு நாடுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை அனுசரிக்க உதவுகின்றன.
உலகளவில், ஆண்டுதோறும் பத்தில் ஒருவர் உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பான உணவு என்பது நல்ல ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான உத்தரவாதங்களில் ஒன்றாகும். பாதுகாப்பற்ற உணவுகள் பல நோய்களுக்குக் காரணமாகவும், வளர்ச்சி மற்றும் வளர்ச்சி குறைபாடு, நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள், தொற்றாத அல்லது தொற்றக்கூடிய நோய்கள் மற்றும் மனநோய் போன்ற பிற மோசமான சுகாதார நிலைமைகளுக்கு பங்களிக்கின்றன.
அண்மைச் செய்தி: ‘மேகதாது; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு’
உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் உலக உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளை அறிவித்தது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பாதுகாப்பான உணவு, சிறந்த ஆரோக்கியம்” என்பதாகும். மேலும், உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பங்கேற்பை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கியது.
பெரும்பாலான உணவினால் பரவும் நோய்களைத் தடுப்பதற்காக, நிலையான முறையில் சிறந்த ஆரோக்கியத்தை வழங்க உணவு முறைகளை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது. சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்காகவும், நிலையான உற்பத்தி மற்றும் பாதுகாப்பான உணவுகளின் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கவும், தங்கள் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும் உணவு அமைப்புக் கொள்கை வகுப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உணவின் பாதுகாப்பு முக்கியமானதாகும். உணவு முறைகளை மாற்றியமைத்து, சிறந்த ஆரோக்கியத்தை நிலையாக வழங்குவதும், உணவினால் பரவும் நோய்களைத் தடுப்பதும் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும். மேலும், உலகளவில் நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானது மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையை குறைக்கும் முயற்சிகளை வலுப்படுத்தவும் இந்த நாள் வாய்ப்பளிக்கிறது.
இந்நிலையில், உலக உணவு பாதுகாப்பு தினத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு, மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம் எனவும், உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








