ஒடிசா பிணவறையில் இருந்து மகனை உயிருடன் மீட்ட தந்தை…. இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தியது யார் என நெட்டிசன்கள் விமர்சனம்…

ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனை 230 கி.மீ பயணம் செய்து பிணவறையில் இருந்து தந்தை ஒருவர் மீட்டிருக்கிறார். இந்த நிலையில் உயிரோடு இருந்தவரை எப்படி இறந்தாக முடிவெடுத்தார்கள் என நெட்டிசன்கள்…

ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனை 230 கி.மீ பயணம் செய்து பிணவறையில் இருந்து தந்தை ஒருவர் மீட்டிருக்கிறார். இந்த நிலையில் உயிரோடு இருந்தவரை எப்படி இறந்தாக முடிவெடுத்தார்கள் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ஆம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அந்த ரயில்களில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் தவிப்புக்குள்ளாயினர். தங்களுடைய அன்புக்குரியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா அல்லது காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களா என கண்டுபிடிக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் சிறிய கடை நடத்தி வரும் ஹெலராம் மாலிக் என்பவரின் மகன் விஸ்வஜித் (24) கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

இதனிடையே, விபத்து குறித்த தகவல் அறிந்ததும், ஹெலராம் தனது மகன் விஸ்வஜித்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, தான் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் படுகாயம் அடைந்திருப்பதாகவும் உடைந்த குரலில் விஸ்வஜித் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஹெலராம் தனது உறவினர் தீபக்தாஸுடன் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாலசோர் விரைந்துள்ளார். 230 கி.மீ. பயணத்துக்குப் பிறகு காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று விஸ்வஜித்தை தேடி உள்ளார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே இதுகுறித்து சிலரிடம் விசாரித்தபோது, காயமடைந்தவர் மருத்துவமனைகளில் இல்லையென்றால், சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாஹநாகா உயர்நிலைப் பள்ளிக்கு சென்று தேடிப் பாருங்கள் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தன் மகன் உயிரிழந்திருக்க மாட்டார் என உறுதியாக நம்பிய ஹெலராம் வேறு வழியின்றி உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளிக்கு சென்று தேடினார். அப்போது உயிரிழந்தோர் உடல்களுக்கு இடையே இருந்த கையை வைத்து விஸ்வஜித்தை கண்டுபிடித்த ஹெலராம்  தனது மகனை கையில் ஏந்தியிருக்கிறார். அப்போது விஸ்வஜித் உயிரோடு இருப்பதை உணர்ந்த ஹெலராம் ஆம்புலன்ஸ் மூலம் தன் மகனை பாலசோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், கட்டாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஸ்வஜித்தை அழைத்துச் செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், தனது மகனை டிஸ்சார்ஜ் செய்யுமாறு ஹெலராம் கோரிக்கை வைத்தார். பின்னர் தனது மகனை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் ஹெலராம்.

அங்கு விஸ்வஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தியது யார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.