தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், திருட்டை தடுக்க தோட்டங்களை சுற்றி வேலி அமைத்தும் தடுப்பு கோணி பை விரிப்பு அமைத்தும் விவசாயிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஓசூர் பகுதிகளில் சுமார் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை ரூ150, 160 வரை விற்பனையாகிறது.
இதனால் தக்காளியை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னையில் மட்டும் நியாய விலை கடைகள் மூலம் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களில் தக்காளியை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தாக்கம் காரணமாக தக்காளி தோட்டங்கள் அழிந்து விட்ட நிலையில் மீதமுள்ள தக்காளி தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து ஓசூர் மார்க்கெட்டிற்கும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தக்காளி விலை உயர்ந்து வருவதால் சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தக்காளியை பறித்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி திருட்டை தடுக்க முள்வேலி அமைத்தும் தோட்டத்தை சுற்றி கோணிப் பை விரிப்பு (கிரீன் மெஷ்) கட்டியும் இரவு பகலாக கண்விழித்து காவல் காத்து வருகின்றனர்.
இது குறித்து கௌதம் பட்டதாரி இளம் விவசாயி கூறுகையில், ஓசூர் பகுதியில் சீதோசன நிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தினால் இலைகள் சுருங்கி விடுகின்றன. மேலும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி காயாக இருக்கும்போதே ஓட்டை விழுந்து வீணாகி விடுகிறது. இதனால் விளைச்சல் குறைந்தது. ஆனால் தேவை அதிகரிப்பு காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது என்றார்.
ஒரு சில விவசாயிகள் தக்காளியின் விலை மேலும் அதிரிக்ககூடும் என எதிர்பார்ப்பால் தனியார் குளிர்பதன கிடங்கில் தக்காளியை பதுக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தக்காளி தோட்டங்களில் சில மர்ம நபர்கள் இரவில் பறித்து சென்றுவிடுகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் நண்பர் தோட்டத்தில் கூட தக்காளியை பறித்துச் சென்று விட்டதாகவும் விவசாயி கௌதம் தெரிவித்தார்.
தோட்டங்களில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு தர வேண்டும். அதேசமயம் இயற்கை உரத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.







