சுங்குவார்சத்திரம் அருகே பிரபல ரவுடி குள்ளா என்கின்ற விஸ்வா போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் பகுதியைச் சேர்ந்தவர்
பிரபல ரவுடி குள்ளா (எ)விஸ்வா (எ)விஸ்வநாதன். இவர் மீது 3 கொலை மற்றும்
கொலை முயற்சி என 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்
ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தின் ஏ+ குற்றச் சரித்திர பதிவேடு குற்றவாளி
ஆவார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த வருடம் 25 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது
செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத்
தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்து
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட்டு
வந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில்
கையெழுத்திடாமல் தலைமுறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர் கொலைகள் நடைபெறுவது தொடர்பாக அதனைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ஐஜி கண்ணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொலை
குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தலைமறைவாக இருந்த குள்ளா (எ) விஸ்வாவை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏ டி எஸ் பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் திருத்தணி அருகே சோளிங்கர் பகுதியில் விஸ்வா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை
போலீசார் குள்ளா (எ) விஷ்வாவை சுற்றி வளைத்து கைது செய்து ஸ்ரீபெரும்புதூர்
அழைத்து வந்துள்ளனர்.
அப்பொழுது சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் தனிப்படை உதவி
ஆய்வாளர் முரளியை தாக்கிவிட்டு தப்பித்து ஓட முயற்சித்து ஓடிய போது
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பாஞ்சூர்
காட்டுப்பகுதியில் சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கியுள்ளார். உடனே போலீசார் தங்களது பாதுகாப்புக்காக சுட்ட போது நெஞ்சு பகுதியில் குண்டு பட்டு கீழே
விழுந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
உடனே போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு
சென்றுள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி
வருகிறது. விஸ்வாவின் உடலானது காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் காயமடைந்த உதவி ஆய்வாளர் முரளி, தலைமை காவலர் வாசு ஆகிய இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.