ஒரு வசனம் கூட இல்லாமல் முழுவதும் நகைச்சுவையை மையமாகக்கொண்டு நடிகர் கமலின் நடிப்பில் வெளியான “பேசும் படம்” மறுவெளியீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம், ‘பேசும் படம்’. அமலா, டினு ஆனந்த், சமீர் கக்கார், பிரதாப் உட்பட பலர் நடித்திருந்தனர். எல்.வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். ஹிந்தியில் ‘புஷ்பக்’ என்ற பெயரில் இந்த படம் வெளியானது. தேசிய விருது பெற்ற இந்தப் படம், 1987ம் ஆண்டு நவ. 27ல் ரிலீஸ் ஆனது.
ஒரு திரைப்படம் என்றால் அதில் பாடல்கள் இருக்க வேண்டும், வசனம் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான நியதியாக இருந்தது. ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் என்றால் அந்த படம் தான் ‘பேசும் படம்’.
டைட்டிலை பேசும் படம் என்று வைத்துவிட்டு படத்தின் உள்ளே ஒரு வசனம் கூட இல்லாமல் வைத்தது தான் கமல்ஹாசனின் சிறப்பு. வசனம் இல்லாத படம் என்பதால் உலகில் உள்ள அனைத்து விதமான மொழி பேசுபவர்களும் இந்த படத்தை பார்க்கும் அளவுக்கு இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டம். காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் இருந்தது. இந்த படம் வசூலில் நல்ல சாதனை செய்தது. சினிமா தோன்றிய காலத்தில் வசனம் இல்லாமல் தான் படம் எடுக்கப்பட்டது.
#Pushpak #Pesumpadam, a pioneer in silent black comedy and an iconic masterpiece of Indian cinema, will be re-released in theatres soon. #Ulaganayagan #KamalHaasan #SingeethamSrinivasaRao@ikamalhaasan pic.twitter.com/X3LKO1pMnZ
— Raaj Kamal Films International (@RKFI) September 16, 2023
இந்த படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது ராஜ்கமல் ஃப்ளிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, மிக விரைவில் “பேசும் படம்” மறுவெளியீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் கமலின் இன்றைய ரசிகர்களும், பரம ரசிகர்களும் வெகுவாக இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.







