தக்காளி விலை அதிரடியாக குறைந்து தற்போது மொத்த விலையில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர் மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக தக்காளி விலை கடும் உயர்வை சந்தித்தது. 1 கிலோ தக்காளி விலை ரூ.200 வரை விற்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களும் கிராம் கணக்கில் வாங்கிய தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
கோயம்பேடு சந்தையில் தக்காளி மொத்த விலையில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. ரூ.210 வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று தக்காளி மொத்த விலையில் 10 ரூபாயும் சில்லறை விலையில் 20 ரூபாயும் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. கடந்த மாதம் தக்காளி விலை 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில். தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்து விலை கிட்டத்தட்ட 180 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தக்காளி மட்டுமின்றி கேரட், பீன்ஸ், வெங்காயம் போன்ற பல காய்கறிகளின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. காய்கறிகள் விலை குறைந்த போதும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க பொதுமக்கள் யாரும் வராததால் காய்கறி விற்பனை மந்தமாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.







