திருமணம் தாண்டிய உறவு – கணவனை தீ வைத்து எரித்த மனைவி!

கிருஷ்ணகிரி அருகே திருமணம் தாண்டிய உறவை கைவிடாத கணவனை அவரது மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நேருபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கசாமி, கவிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரங்கசாமி கூலி வேலை செய்து வரும் நிலையில் கவிதா பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ரங்கசாமிக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இது குறித்து அவரது மனைவி கவிதாவிற்கு தெரிய வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கணவன் மனைவி இடையே சண்டை நடந்துள்ளது. இதனால் சரியாக வீட்டிற்கு வராத ரங்கசாமி மீது கோபத்தில் இருந்த கவிதா கடந்த திங்கள்கிழமை வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவன் ரங்கசாமியை தீ வைத்து எரித்துவிட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மகன் சூர்யா மற்றும் மகள் சாதிகா தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக ரங்கசாமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரங்கசாமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரங்கசாமியின் மகன் சூர்யா காவேரிபட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவேரிப்பட்டினம் ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கவிதாவை தேடி வருகின்றனர். திருமணம் தாண்டிய உறவை கைவிடாத கணவனை மனைவியே தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.