ஆந்திராவில் வெடி விபத்து – ஆசிரியர் உட்பட 5 பேர் உயி*ழப்பு!

ஆந்திராவில் சாலைப் பணிக்காக வைக்கப்பட்ட வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

​ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காகப் பாறைகளைத் தகர்ப்பதற்காக ஜெலட்டின் குச்சிகள் பொருத்தப்பட்ட சிறப்பு சாதனம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வெடி மருந்துகள் பொருத்தப்பட்டபோது கருவியில் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இந்தவெடி விபத்தை தொடந்ர்து வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

​இந்த வெடிவிபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் ஓட்டுநர், மூன்று தொழிலாளர்கள் மற்றும் எதிரே சென்று கொண்டிருந்த ஆசிரியர் ஆகிய 5 பேர் உயிரை இழந்துள்ளார். உயிரிழந்தவர்களில் நான்கு பேர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுனிதா, தேவாரப்பள்ளியைச் சேர்ந்த தொழிலாளர் மணி, சியடிகாடாவைச் சேர்ந்த தொழிலாளர் நாராயணராவ் மற்றும் கடப்பாவைச் சேர்ந்த தொழிலாளர் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​இச்சம்பவத்திற்கு ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் வங்களபுடி அனிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தை “மிகவும் சோகமானது” என்று கூறினார். மேலும்விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவச் சிகிச்சையும் உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு பக்கபலமாக நின்று தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.