அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகள் உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சோதனையில், 34 லட்சத்து ஆயிரத்து 60 ரூபாய் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7கிலோ 200 கிராம் வெள்ளிப் பொருட்கள், 5 கணினி ஹார்ட் டிஸ்குகள், ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், கே.சி.வீரமணி வீட்டின் வளாகத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டும் சோதனை நடத்தப்பட்டதாக கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை எனவும் வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.