விமானத்தில் பயணம் செய்ய நினைத்தவர் கூட அதே அளவு வசதி உள்ள வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணம் செய்வதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், 25ஆவது வந்தே பாரத் ரயில்
வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே மேலாளர், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை பார்வையிட்ட அவர், அதன் சிறப்பம்சங்களையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், உலகிலேயே அதிக ரயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனம் என்ற பெயரை பெரம்பூர் ரயில் தொழிற்சாலை பெற்றிருப்பது மிகப்பெரிய பெருமை என்று கூறினார்.






