சாலை மேம்பால பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க எந்தவிதமான நடவடிக்கைகளையும் முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு எடுக்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு அரசால் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இதற்கு பதிலளிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை கோயம்பேட்டில் பாலப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 2015ல் துவக்கப்பட்டது. இப்பணியினை 2018க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட மேம்பாலப்பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் 2018 வரை எதுவும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக இரு முறை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுவை அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை திமுக அரசு பெற்றது. அதில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது உங்கள் அரசு தான். இறுதி கட்ட பணிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இம்மாத இறுதிக்குள் முடித்து கோயம்பேடு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அந்த அறிக்கையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.







