ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று உள்ளார். இதன் காரணமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், நடனமாடி, வென்றெடுப்போம், வென்றெடுப்போம் 40 தொகுதிகளையும் என்ற முழக்கத்துடன் மேளதாளம் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினை, பட்டாசு வெடித்து, உற்சாக முழக்கமிட்டு வரவேற்று, வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது திமுக நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், அனைவருக்குமான வளர்ச்சி என்ற திராவிட மாடல் தத்துவத்தால், ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக்கூடாது என பரூக் அப்துல்லா மட்டுமின்றி நாட்டில் பல தலைவர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர் என்றும், அது நியாயமான கேள்வி என்றும் அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், 22 மாதங்கள் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளை மக்கள் அங்கீகரித்து, ஈரோடு கிழக்கில் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். கட்சி தலைவருக்கே தகுதியில்லாமல் பேசியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள். இனிமேல் பாஜகவுடன் சேரும் எந்த கட்சியும் டெபாசிட்டை இழப்பார்கள் அண்ணாமலை என்பவர் அரசியலில் 3 மாத கைக்குழந்தை. அண்ணாமலை காணமல் போய்விட்டார் என்றும் தெரிவித்தார்.









