ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 233 வது முறையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து 8ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி மாதம் 10ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிற 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் நாளையும், அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் 3ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் என அழக்கப்படும் பத்மராஜன் என்பவர் 233 வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மராஜன் இதுவரை கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற,சட்டமன்ற தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– யாழன்