உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை என்று நீண்ட நாட்களாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக இல்லை என்று நீண்ட நாட்களாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து பேச, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை அமித்ஷாவிடம் வழங்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபட்டது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மாலை 8மணி அளவில்   சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்த பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திந்தனர்.

இதேபோல நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியை இறுதி செய்யும் சந்திப்பாகவும் இது அமையலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.