மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சிலர்…

பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்துகளில் ஏறும் போதும், பயணம் செய்யும்போதும், பாதுகாப்பான விதிகளை அவர்கள் கடைப்பிடிக்கச் செய்ய, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகளை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ, அந்த பேருந்தை நிறுத்தி, படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரையை, மாணவர்கள் கேட்காமல் மீறி
செயல்பட்டு, நிலைமை கட்டுபாட்டை மீறிச் சென்றால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை அவசர அழைப்பு 100 என்ற எண்ணுக்கோ, மா.போ.க வான்தந்தி பிரிவுக்கோ தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.

பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி
செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.