திருச்செங்கோடு நகர பகுதியில் டீக்கடை வைப்பதற்காக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பொறியியல் பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக சாலையில் செல்லும் பெண்களிடம் தொடர் நகைப்பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பள்ளிபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர்.
அப்போது அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் என்பதும் டீக்கடை வைப்பதற்காக கடந்த 2 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 14 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.







