மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர்…

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”திடீர் கனமழையின் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் சீர் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நேற்று அறிவுறுத்தினார். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க பட்டினப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

19-ம் தேதி காலையில் பெய்த கனமழையின் காரணமாக பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருக்கக்கூடிய மின் மாற்றி பழுதடைந்ததால் இப்பகுதியில் மின்விநியோகம் செய்யப்படுவது சிக்கலானது.

கனமழையில் சென்னை மாநகரம் புறநகர் பகுதிகளில் 3 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் 51 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் 27 பில்லர் பாக்ஸ்களும் பாதிக்கப்பட்டுள்ளன. திடீரென்று ஏற்பட்ட இந்த மழையால் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் மின்சார துறை சார்பில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஆங்காங்கே உள்ள பாதிப்புகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்குள் பாதிப்புகள் சரி செய்யப்பட்டது.

இன்று மாலைக்குள் மின்சாரம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டு மின்சார விநியோகம் சீராக வழங்கப்படும். வாட் மீட்டர் டெண்டர் விடப்பட்டிருக்கிறது, அவை வந்தவுடன் ஒரே மின்நிலையத்தில் அதிக லோடு வராமல் பிரித்துக் கொடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் மின்னகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் மின்சார தடை இருக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் கண்டிப்பாக நீடிக்கும், அதற்குள் மின்சார துறையின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.”

இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.