குன்றத்தூரில் காற்றில் கிழிந்த பேனர் உயரழுத்த மின்கம்பத்தில் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனா்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே கொல்லச்சேரி ஏரிக்கரை செல்லும் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஏராளமான வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில் குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் மாடியில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று கிழிந்து சாலையோரம் இருந்த உயரழுத்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் குன்றத்தூர் சுற்று வட்டார
பகுதிகளில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மாலை 4 மணிக்கு விழுந்த பேனரை இரவு வெகுநேரம் ஆகியும் அகற்றுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது கோடைக்காலம் என்பதால் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாத காரணத்தால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வியாபாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டதாக அப்பகுதி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-ரூபி.காமராஜ்