காங்கிரஸ் தலைவர் தேர்தல்; சோனியா, ராகுல் காந்தி வாக்களிப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., மூத்த தலைவர்கள் பா.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ்  உள்ளிட்டோர் வாக்களித்தனர். அகில இந்திய…

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., மூத்த தலைவர்கள் பா.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ்  உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநிலங்களிலும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.

இத்தேர்தலில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மாவட்டங்களின் தலைவர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். கியூஆர் கோடுடன்(QR Code) வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி அனைவரும் வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் பா. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், ராஜஸ்தான் பிரதமர் அஷோக் கெலாட் உள்ளிட்டோர் வாக்களித்துச் சென்றனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  வாக்களித்தனர். இந்த தேர்தல் குறித்து பேசிய சோனியா காந்தி, தான் இதற்காக  நீண்ட காலம் காத்திருந்ததாகக் கூறினார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கர்நாடகாவில் உள்ள பல்லாரியில் வாக்களித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரில் வாக்களித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசி தரூர் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், தானும் பதிலுக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  டெல்லியில் வாக்களித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.