தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் 127 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக ரூ.50,000 மேல் கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும், சட்டவிரோதமாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்புக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது.
இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சம் கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சம் மேற்குவங்கத்தில் ரூ.112 கோடியே 99 லட்சம் புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் 295 தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.







