டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உறுதியுடன் பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்தியா என்ற பெயரில் தேசிய அளவில் உருவாகியுள்ள கொள்கை கூட்டணிக் கட்சிகளில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது. அதே நேரத்தில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் , நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என உறுதியளித்தார். 2014-ம், ஆண்டு 38 சதவிகிதமாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு வங்கி 2019 ஆம் ஆண்டு 45 சதவிகிதமாக உயர்ந்த்தாகவும் அடுத்து வரும் தேர்தலில் 50 சதவிகித்த்திற்கும் அதிகமாகவும் எனவும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். மொத்தமாக 38 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட முக்கியத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா வாசலுக்கே வந்து வரவேற்றார். கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. கூட்டம் நடந்த அரங்கில் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் பாஜக தேசிய தலைவர் நட்டா அமர்ந்த நிலையில் பிரதமரின் வலதுபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார். மத்தியில் ஆளும் கட்சி தேசிய அளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டது அதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தின்படி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வடக்கு, கிழக்கு தெற்கு என மூன்று பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிராந்தியங்கள் சார்பாக தனித்தனியே பிரதமருக்கு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில், தெற்கு பிராந்திய பிரதிநிதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு மாலை அணிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதற்கேற்றார் போல தென்சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட தொகுதிகளை குறிவைத்து தேர்தல் பணிகளையும் பாஜக தொடங்கியுள்ளது.
இருப்பினும் அதிமுக கூட்டணியில்லாமல் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜக அதிமுகவிற்கான முக்கியத்துவத்தை தொடந்து அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே டெல்லியில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட முக்கியத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் அடிக்கடி ஏற்படும் கருத்து மோதல்களை பாஜகவின் தேசிய தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை நேரடியாக விமர்சனம் செய்த போதிலும் அதனை பொருட்படுத்தாத எடப்பாடி பழனிசாமி தங்களின் தொடர்பு தேசிய தலைமையுடன் மட்டுமே என்பதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.
கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், தமிழகத்தில் நிலவக்கூடிய அரசியல் சூழல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்வது என பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அண்மைக்கால விமர்சனங்கள் அதிமுக பாஜக கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணி என்றாலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை டெல்லிக்கே சென்று உறுதிபடுத்தியிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியிருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.







