முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் திடீர் திருப்பம் ஏற்படுமா?- பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். நாளை அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனினும் முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கிடையே நடைபெற்று வரும் அதிகார மோதல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் அதிமுகவில் தனது உரிமையை நிலைநாட்ட தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  ஓபிஎஸ் தரப்பில் மேல்முறை செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவு யாருக்கு என்கிற கேள்வி தொடர்ந்து தமிழக அரசியலில் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதை அக்கட்சி இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியை சந்தித்து பேச முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு ஏதும் நிகழவில்லை. மேலும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் அவரை சந்திக்க முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் ஓ.பன்னீர்செல்வத்தையோ, அல்லது எடப்பாடி பழனிசாமியையே பிரதமர் மோடி சந்தித்து பேசவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை சேலம் செல்ல திட்டமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, இரவு 9மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம்  டெல்லி செல்ல உள்ளார். நாளை அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நாளை எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினால், அது அதிமுக உட்கட்சி மோதல் விவகாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

Arivazhagan Chinnasamy

“தேர்தலுக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டவில்லை”

Gayathri Venkatesan

பிரச்சனைகளுக்கு இணையாக வாய்ப்புகளும் உள்ளன- டாடா குழும தலைவர்

Web Editor