ஈரோடு இடைத்தேர்தல் – வேட்பாளர் தேர்வு குறித்து இபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு  குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு  குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக -தாமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி கருப்பண்ணன், சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். சேலம் நெஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதிமுக சார்பில் இந்த இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சரான கே.வி.ராமலிங்கம் 2011,2016 ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.