2024 PT5 என்ற சிறுகோள் பூமியின் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பயணிக்க உள்ளதாக அமெரிக்க வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் அரிய நிகழ்வாக செப். 29 முதல் நவ. 25 வரை பூமியை சுற்றிவரும் நிலாவுடன் ஒரு புதிய துணைக்கோள் சேர்ந்து பயணிக்க உள்ளது. அதன்படி, பூமிக்கு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு 2 நிலவுகள் இருக்கும் என அமெரிக்க வானியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2024 PT5 என பெயரிடப்பட்ட இந்த துணைக்கோள், ஆகஸ்ட் 7, 2024 அன்று ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) ஐப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. ATLAS என்பது NASA-வின் நிதியுதவி பெற்ற (சிறுகோள் தாக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும்) அமைப்பாகும். ஆனால், இந்த துணைக்கோள் நிலவைப் போல நிரந்தர இயற்கை துணைக்கோள் அல்ல, மாறாக தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட பறக்கும் அமைப்பாகும் (ஏறக்குறைய துணைக்கோளே அல்ல).
பூமிக்கு அருகில் உள்ள பல பொருள்கள் (NEOs) குறைந்த சார்பு வேகத்துடன் பூமியை நெருங்கிய வரம்பில் அணுகுகின்றன. இந்த NEOக்கள் மினி-மூன் நிகழ்வுகளுக்கு உட்படுகின்றன. அப்போது அவை தனது சொந்த புவி மைய ஆற்றலை பல நாட்கள், மாதங்களுக்கு இழக்கின்றன. சில சமயங்களில் அதன் ஆற்றல் எதிர்மறையாக கூட மாறுகிறது. இந்தக் காலக்கட்டத்தில், அந்தப் பொருள்கள் பூமிக்குக் கட்டுப்பட்டிருக்கும் போது ஒரு சுழற்சியை கூட முடிக்காமல், குதிரைக் காலணிப் பாதைகளைப் பின்பற்றி, கிரகத்தைச் சுற்றி வருகின்றன. இதேபோல், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2024 PT5 குதிரை காலணி பாதையைப் பின்பற்றி, செப். 29 முதல் நவ. 5 வரை மினி நிலவாக மாறும். 53 நாட்களுக்குப் பிறகு, சிறுகோள் அதன் வழக்கமான சூரிய மையப் பாதைக்குத் திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வானியல் அமைப்பின் ஆய்வுக் குறிப்புகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சிறுகோள் வெறும் 10 மீட்டர் (33 அடி) விட்டம் கொண்டது. Carlos de la Fuente Marcos மற்றும் Raul de la Fuente Marcos ஆகியோரால் எழுதப்பட்ட இந்த அறிக்கை, NEO களின் எண்ணிக்கையில் இருந்து அடிக்கடி சிறுகோள்களை கைப்பற்றி, அவற்றை தனது சுற்றுப்பாதையில் இழுத்து, சிறுகோள்களை மினி நிலவுகளாக மாற்றும் பூமியின் போக்கு குறித்து குறிப்பிட்டுள்ளது. தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட ஃப்ளைபைகள் ஒரு சுழற்சியை கூட முடிக்க முடியாது என்றாலும், மற்ற தற்காலிகமாக கைப்பற்றப்பட்ட ஆர்பிட்டர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை முடிக்க முடியும்.







