“கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில் கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது”

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும்…

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர், பேரூராட்சித் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வேட்பாளர்கள் போட்டியிட்டு அந்தந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், திமுகவுடன் கூட்டணியில் போட்டியிட்ட தோழமை கட்சிகளுக்கு சில குறிப்பிட்ட  பதவிகள் ஒதுக்கப்பட்டன. உதாரணமாக திருப்பூரில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் பதவி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதேபோல, விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இது பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தொடர்ந்தது.

இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, “தலைமைப் பதவிகளை நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும்; சில இடங்களில் போட்டி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்” என்றும் “முதலமைச்சரின் ஆணையை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’ காத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருந்தார்.

https://twitter.com/thirumaofficial/status/1499664869414797312

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து “கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில் கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது” என வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் தனது அறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு; நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டில்” மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

https://twitter.com/mkstalin/status/1499729367571714050

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.