கொரோனா காரணமாக தமிழ்நாடு முழுவதும் 4,592 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாக குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அக்டோபர் மாதங்களில் கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது அதிகளவில் குழந்தைகளையே தாக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலையின்போது, குழந்தைகள் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேரும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் 4,592 பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 41 பேர் உள்ளதாகவும், அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.







