கோயில் சொத்துதானே என அசட்டையாக இல்லாமல், கோயில் சொத்துகளை மீட்ட பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு தான் உண்டு என கூட்டுறவுத்துறை அமைச்சர் இ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 33 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்து, சிறப்பு வழிபாட்டில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, அரசு ஊழியர் மட்டுமல்ல, 7 கோடி மக்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆசையாக இருக்கிறார் முதலமைச்சர். திமுகவைப் பொறுத்தவரை கோயில் சொத்துதானே என அசட்டையாக இல்லாமல், கோயில் சொத்துகளை மீட்ட பெருமை திராவிட மாடல் ஆட்சிக்குத் தான் உண்டு என குறிப்பிட்டார். ஆன்மிகத்திற்கோ, கோயிலுக்கோ எந்த அளவுக்கு திமுக செயலாற்றியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
-ம.பவித்ரா








