வடிந்து வரும் மழை நீர் – சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

வடிந்து வரும் மழை நீர்  காரணமாக சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட…

வடிந்து வரும் மழை நீர்  காரணமாக சென்னையில் 80% பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜம் என பெயரிடப்பட்ட இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

மேலும் இப்புயலானது தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது. தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் மிக்ஜம் தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும்,  வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.

இந்த நிலையில் கனமழை நின்று ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் வடிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவை தொடங்கியது. 30 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவை இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 80% பேருந்துகள் இயக்கம் இயக்கப்பட்டுள்ளன.  கடும் வெள்ளத்திற்குள்ளாகியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப்பணிக்காகவும் பிரத்யேகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.