“மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம்”

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.   பொறுப்பும் பொது நலமும் என்று செயல்பட்டு வரும்…

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் சேலத்தில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

 

பொறுப்பும் பொது நலமும் என்று செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மழை பாதிப்புகளுக்கு நிவாரண உதவிகள் தொடங்கி, மருத்துவ உதவி, கல்வி உதவி என நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் தொடர்ந்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் (ஜூலை) முழுவதும் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. போதை பழக்கத்திற்கு அடிமையாகும் அடுத்த தலைமுறையை போதையில் இருந்து காப்பாற்றும் முயற்சியாக, நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் எடுத்த முயற்சியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவரிசையில் சேலத்தில் போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. சேலம் உடையாபட்டி ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், காவல்துறையினர், போலிக்ரஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் அருள் சகோதரர் குழந்தைசாமி, துணை முதல்வர் இயேசுதாஸ் ஆகியோர் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினர். விழாவில் பேசிய பள்ளியின் முதல்வர், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார். படிக்கும் தருவாயில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

பின்னர் பேசிய காவல்துறையினர், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 2500 மாணவர்கள் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் மூலமாக போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியை இறுதிவரை கடைப்பிடிப்போம் என உறுதியளித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.