மதுரைக்கு நீங்க இருக்கும்போது பொழுதுபோக்கு தேவையா – அமைச்சரின் நகைச்சுவை

முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மதுரைக்கு பொழுதுபோக்கு வசதி இல்லை என்று பேரவையில் கேள்வி எழுப்பியதும், குறிக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீங்கள் இருக்கும் போது மதுரைக்கு பொழுது…

முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ மதுரைக்கு பொழுதுபோக்கு வசதி இல்லை என்று பேரவையில் கேள்வி எழுப்பியதும், குறிக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நீங்கள் இருக்கும் போது மதுரைக்கு பொழுது போக்கு தேவையா என நகைச்சுவையாக பேசினார்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும், அதற்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்குவதும் போன்ற செயல்கள் நடைபெற்று வரும்போது, அவ்வப்போது நகைச்சுவையான சம்பவங்களும் இடம் பெறும். அமைச்சர்கள், அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் சபாநாயகர் கூட சில நேரங்களில் நகைச்சுவை திறனோடு சட்டப்பேரவையை வழிநடத்துகின்றனர். அதுபோன்று, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நகைச்சுவை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 

சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையின் மெரினாவாக மாரியம்மன் கோயில் தெப்பகுளம் இருப்பதாகவும், இங்கு லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அமைச்சர் இளைஞராக இருப்பதாக கூறிய அவர் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

செல்லூர் ராஜூவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், தங்கள் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். பின்னர் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் 20 லட்சம் பேர் இருப்பதாவும், அங்கு பொழுது போக்குவதற்கு எந்த அம்சமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

அப்போது, குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று தெரிவித்தார். அவர் இருக்கும்போது, பொழுதுபோக்கு தேவையா என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற தொடங்கின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.