இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது தளத்தை தொடர்ந்து பயன்படுத்த பிறந்த தேதியை உள்ளிடுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், பிறந்த தேதியை கட்டாயமாகப் பயன்படுத்துவதை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் தளத்தை உலக அளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2010இல் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியது. பயனர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது சில கொள்கை முடிவுகளைக் கொண்டு வருவது வழக்கம்.
அதன்படி, தங்களது தளத்தில் வயது சரிபார்ப்பை கட்டாயமாக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. தற்போது, அனைத்துப் பயனாளர்களும் பிறந்த தேதியை உள்ளிடுமாறும், இதைக் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், பிறந்த தேதியை உள்ளிடுவதை கட்டாயமாக்கியுள்ளதாகவும், போலியான பிறந்த தேதியைக் கொடுத்தால் கண்டுபிடித்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், செல்லப் பிராணிகள் மற்றும் பிசினஸ் அக்கவுண்ட் பயனாளர்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








