நிலம் மற்றும் கட்டுமானச் செலவில் நாங்கள் செலவிட்ட தொகையைக் கணக்கில் கொண்டால், எங்களின் ஒட்டுமொத்த இழப்பு சுமார் ரூ.500 கோடி என்று உத்தரப் பிரதேசத்தில் இடித்துத் தள்ளப்பட்ட இரட்டை கோபுரத்தை கட்டிய சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இடித்துத் தள்ளப்பட்டது. விதிகளை மீறி கட்டிடத்தின் உயரத்தை எழுப்பியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நடவடிக்கையில் 3,700 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இடிப்பதற்கான செலவு சுமார் ரூ. 20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கட்டடத்தை கட்டிய சூப்பர் டெக் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.அரோரா கூறியதாவது:
நிலம் மற்றும் கட்டுமானச் செலவு, பல்வேறு ஒப்புதலுக்காக அதிகாரிகளிடம் செலுத்தப்பட்ட கட்டணம், பல ஆண்டுகளாக வங்கிகளுக்கு செலுத்திய வட்டி மற்றும் வாங்குபவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்பட்ட 12 சதவீத வட்டி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், எங்களின் ஒட்டுமொத்த இழப்பு சுமார் ரூ. 500 கோடியாகும்.
இரண்டு டவர்களிலும் உள்ள 900க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 700 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நொய்டா மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தின்படி நாங்கள் இந்த கோபுரங்களைக் கட்டினோம். ரூ.100 கோடிக்கு காப்பீடும் எடுத்திருக்கிறோம் என்றார் அரோரா.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இரட்டை கோபுரங்களை இடிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், முன்பதிவு செய்ததில் இருந்து 12 சதவீத வட்டியுடன் வீடு வாங்குபவர்களுக்கு முழுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.








