திமுக அரசு எப்போதும் தொழிலாளர் நலன் காக்கும் அரசாக விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைக்கும் மக்களால் பூமியில் இன்னும் பல தொழில்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவ்வகையில் இன்று உழைப்பாளர்களை போற்றும் வகையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களே இந்த நாட்டு வளர்ச்சியின் முதுகெலும்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போர்வாளாகவும், திமுக அரசு எப்போதும் திகழும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் அமைதி மட்டுமே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் வாழ்வில் எழுச்சி பொங்கிடவும், மகிழ்ச்சி தவழ்ந்திடவும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.







