தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்வின் மூலம் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்தனர். ஆலங்குளம் மார்கெட் பகுதியில் விஜயகாந்த் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து பிரேமலாதா விஜயகாந்த் சிறப்பரை ஆற்றினார்.
அப்போது பேசியவர், ஆலங்குளத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்வின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆலங்குளம் தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முக்கியமான தொகுதி. இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். 2026 தேர்தலில் தேமுதிக அமைக்கும் கூட்டணி ஆட்சியாளர் மூலம் மக்கள் அடிப்படை தேவைகளை தேமுதிக நிறைவேற்றும்.
ஜாதி, மொழி, மதம் இனத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக. கேப்டன் விஜயகாந்த் இதை அடிக்கடி சொல்வார். ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யும் தலைவர்கள் மத்தியில் வித்தியாசமானவர் விஜயகாந்த். தேமுதிக பீனிக்ஸ் பறவை போன்றது. இந்த கட்சிக்கு அழிவே கிடையாது. கடைகோடி தொண்டர்கள் இருக்கும் வரை தேமுதிகவை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. கடலூர் மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம். ஆட்சியின் மேலே இருப்பவர்கள் கீழே வந்து தான் ஆக வேண்டும், கீழே இருப்பவர்கள் மேலே வந்து தான் ஆக வேண்டும். இது வாழ்க்கை சக்கரம்.
மாற்றம் ஒன்று தான் மாறாதது. மாற்றம் நிலையானது. கேப்டன் பிறந்தது முதல் வாழ்ந்து மறைந்தது வரை மக்களுக்காகவே வாழ்ந்தார். நல்லவர்கள் இலட்சியம் வெல்வது நிச்சயம் நல்ல கூட்டணியை அமைப்போம் நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். முறைப்படி உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.







