பலரின் இதயங்களை கலங்கடித்த விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம்

தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் மையப்புள்ளியாக சிங்கமென வலம் வந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து, அதனை கடனிலிருந்து மீட்டெடுத்தார். அரசியலுக்குள்ளும் அதிரடியாக நுழைந்து விருத்தாசலத்தில் வெற்றிகண்டார். 2011 தேர்தலில்…

தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் மையப்புள்ளியாக சிங்கமென வலம் வந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து, அதனை கடனிலிருந்து மீட்டெடுத்தார். அரசியலுக்குள்ளும் அதிரடியாக நுழைந்து விருத்தாசலத்தில் வெற்றிகண்டார்.

2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். அதன்பிறகான தேர்தல்களில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அரசியல் கட்சிகள் போட்டி போட்டன. தனக்கு சரியென பட்ட முடிவை எடுத்தார் விஜயகாந்த். அதனால், அரசியலில் பல இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது.
2016 தேர்தலுக்கு முன்பே சில உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை.

உடல்நலக்குறைவுக்காக அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று விஜயகாந்த் சிகிச்சை எடுத்து வந்தார். மக்களவை, சட்டமன்றத் தேர்தலின்போது பேச முடியாத நிலையிலும் கூட சில இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இப்போது கூட வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வரும் விஜயகாந்த், சில நேரங்களில் தேமுதிக அலுவலகம் வந்து தொண்டர்களை சந்திக்கிறார்.

அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மனிதநேயம் என்றால் விஜயகாந்த் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டும் அளவுக்கு நலத்திட்டங்களை செய்தவர். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் ஒரு பகுதியை தர தயார் என்ற அவரின் அறிவிப்பே அதற்கு சான்று.

இன்றைக்கும் அரசியலில் விஜயகாந்தின் இடம் அப்படியேதான் உள்ளது. அவர் முழு நேர அரசியலில் இருந்திருந்தால் திமுக, அதிமுகவுக்கு அடுத்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தேமுதிகதான் இருந்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கடைசியாக விஜயகாந்த் திருமண நாளன்று அவரது மகன் விஜய பிரபாகரன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தேமுதிக தொண்டர் மோகன் என்பவர், விஜயகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் தனது பழைய கம்பீரம் சற்றே குறைந்து, உடல் மெலிந்து காணப்படுகிறார் விஜயகாந்த். புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்களும், பொதுமக்களும் சிங்கமென கம்பீரமாக வலம் வந்த நம்ம விஜயகாந்தா இது, என திகைப்புடன் உற்று நோக்குகின்றனர். பலரின் இதயங்களை கலங்கடித்துள்ளது அவரது சமீபத்திய புகைப்படம்.

விஜயகாந்த் உடல்நலன் சரியாகி மீண்டு வர வேண்டும், பழையபடி அவரது சிம்மக் குரல் அரசியல் களத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவினரை தாண்டி அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.