ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, விருப்ப மனு வாங்குவது உள்பட தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் 16,17 ஆகிய 2 நாட்கள் மாவட்டக் கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்யலாம் எனத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அடிப்படை உறுப்பினராக இருப்பது அவசியம் என்ற அவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விருப்ப மனுவுக்கு ரூ.4,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக, 2021 சட்டமன்றத் தேர்தலை அமமுகவுடன் இணைந்து எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.







