உசிலம்பட்டி அருகே டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் மறைந்த பின்னணி இசை பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இசைப்போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 100க்கும் அதிகமான ஒலிப்பெருக்கி அமைப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் பாரம்பரிய முறைப்படி கிராமபோன் ரெக்கார்டு மூலம் பழைய டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை ஒலிக்க வைத்து போட்டிகளை நடத்தினர்.
இரு தரப்பினரில் யாருடைய பாடல் அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறதோ அவர் வெற்றியாளராக கருதப்படுவர். மூன்று சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு வரும் 22-ம் தேதி அமைச்சர் பி.மூர்த்தி பரிசு மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நலிவடைந்து வரும் இந்த தொழிலை மீட்டெடுக்கவும், ஒலிப்பெருக்கி உரிமையாளர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்க கோரும் விதமாக இது போன்ற போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும், இந்த ஆண்டு டிஎம்எஸ்-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெகுவிமர்சையாக இந்த போட்டி
நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் சங்க உறுப்பினர், கடந்த 5 ஆண்டுகளாக இசை பாடகர் டிஎம் சௌந்தர்ராஜனின் நினைவாக இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஒலிப்பெருக்கி தொழில் நலிவடைந்து வருவதாகவும், வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.







