மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் ஆகியவை மாநில பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 2,87,250 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னரே அறிவித்திருந்தார்.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு 10 விழுக்காட்டிற்கு மிகாமல், போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 1.67% வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள், போனஸ் மற்றும் கருணைத் தொகையாக சுமார் ரூ 8,400 பெறுவர் என கூறப்படுகின்றது.







