மாவட்ட வாரியாக சாலை பாதுகாப்புக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவம், பொதுப்பணித்துறை, சாலைப் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் என 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழு, மாவட்டங்களில் ஏற்படும் சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அதோடு, சாலை பாதுகாப்பு திட்டத்தை உருவாக்குதல், விபத்தை குறைப்பதற்கான வழிமுறைகள், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை ஆகியவைகளும் இக்குழுவால் மேற்கொள்ளப்படும்.
மேலும்,விபத்து ஏற்படும் பகுதிகளில் ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், அவசர காலங்களில் உரிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவைகளும் இந்த சாலை பாதுகாப்புக் குழுவால் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, பெரிய விபத்து நடைபெறும் இடங்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-கோகுலப் பிரியா








