விருதுநகர் மாவட்டம் அருகே 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி சத்திரப்பட்டி
சாலையின் மேற்குப்பகுதியில் கிராமமான அரசியார்பட்டி பகுதியில்
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம்
சிவகுமார், துள்ளுக்குட்டி, பிரகதீஸ்வர், பொன்ரமணன் ஆகியோர் கள ஆய்வு
செய்தனர். அப்போது கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்தநிலையில்
சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் ஒரு தாழியின்
வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. உள்ளது. மேற்பகுதி அரைவட்டமாக உள்ள, 1
முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில்,
தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள்.
மேலும் 3 மீட்டர் உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில்
கிடக்கிறது. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும், பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக ஈமச்சின்னங்கள்
அமைக்கப்பட்டதால் இக்காலம் பெருங்கற்காலம் எனப்படுகிறது. இக்காலத்தின்
ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில்
போட்டுவிடுவார்கள். அதை விலங்கு பறவைகள் இரையாய் கொண்டபின் இருக்கும்
எலும்புகளை சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில் வைத்து அடக்கம்
செய்வார்கள். என்ற தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.