தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத் பாபு. இவரின் இயற்பெயர் சத்யம் பாபு தீட்சிதுலு. 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். 1973 ஆம் ஆண்டு ராமராஜ்யம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்த சரத் பாபு பல வெற்றி படங்களில் நடித்தார். பின் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1977 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலைக் கேட்க பார்க்கும் யாருக்கும் சரத்பாவுவைப் பிடிக்காமலிருக்க வாய்ப்பில்லை. தமிழில் அவர் ஏற்று நடித்த பல திரைப்படங்கள் மிக முக்கியமானவை. சலங்கை ஒலி, நிழல் நிஜமாகிறது, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல் நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில், முத்து, என இவர் நடித்த அனைத்து படங்களும் காலத்தால் அழியாதவை.
தமிழில் பெருமைக்குரிய பல முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்திருக்கிறார். குறிப்பாக அவற்றில் மாஸ்டர் பீஸ் என்றால் அது முள்ளும் மலரும் மற்றும் சலங்கை ஒலியைச் சொல்லலாம்.
நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. திரைப்படத்தை தாண்டி ரஜினியும் இவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் தெலுங்கில் சீரஞ்சீவியின் உடன் சரத் பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார்.
பிசியாக நடித்து வந்த காலங்களில் பல இயக்குநர்களின் ஃபார்வேர்ட் நடிகராக இருந்தார் சரத்பாபு. இவர் இயக்குநர்களின் நாயகன் என்றே திரை வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். இவர் ஒரு படத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே தன் போக்கில் கச்சிதமாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறமையான நடிகர். அதற்காக இவர் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை படத்திலும் சரத் பாபு நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.








