மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஜி.ரவி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி உயிரை மாய்த்துக்
செய்துகொண்டார். பேராசிரியர் ரவி அவரின் அசல் சான்றிதழ்களை விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் கைப்பற்றி வைத்திருந்ததும், அவருக்கு சரிவர ஊதியம் வழங்காததுமே என்று குற்றம்சாட்டி, கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும், மாநில உயர்கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடமும் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் பேராசிரியர்களின் நலனை உறுதி செய்திட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லக்ஷ்மி ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையிலோ, அதிக பணிப்பளுவையோ தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்படுத்தக்கூடாது என்றும், மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்லூரி நிர்வாகங்கள் வழங்கிட வேண்டும் என்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக்காரணத்தைக் கொண்டும் கைப்பற்றக்கூடாது என்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிடுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளை அடிக்கடி திடீர் ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







